வற்றாத நீரும் வளம் கொழிக்கும் காவிரியும் முற்றாத வாழை முகம் பார்க்கும் கொள்ளிடமும், வெண்ணாற்றிடை உயர்ந்த வீரத் தமிழ்க் கலையும் கண்ணாரக் காண்கின்ற கன்னித் தமிழகமாம் சோழ வளநாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம்.
திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

இருப்பிடம்:
திருவாரூர் மாவட்டத்தில், வலங்கைமான் வட்டத்தில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ., தொலைவிலும், கும்பகோணம் மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தல வரலாறு:
இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.
அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காப்பாற்றியதால் இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று.

மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத் தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவபுண்ணியத்தால் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.
தல மூர்த்திகள்:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்
தலச்சிறப்பு:
திருஇரும்பூளை மற்றும் ஆலங்குடி என்ற பெயர்களால் விளங்கப் பெறுவது. திருஞானச்சம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது.
பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை. இது இன்றளவும் நடைபெற்றுவரும் கண்கூடான உண்மையாகும்.

தலவிருட்சம்:
பூளைச் செடி
காலம்:
இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே இத்திருக்கோயிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை.
ஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டாகும். எனேவ அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாக கருத்தில் கொள்ளலாம்.
வழிபட்டோர்:
விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும்.
திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்து பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.
தீர்த்தங்கள்:
இத்திருத்தலத்தை சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோயிலை சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிழ்த புஷ்கரணி எனும் தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.
பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிழ்த பஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.
வழிபாடும் வழிபடும் முறைகளும்:

தினசரி மற்றும் சிறப்பு பூஜைகள்:
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
1. காலசந்தி காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை.
2. உச்சிகாலம் மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை.
3. சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை
4. அர்த்தசாமம் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை..
அபிஷேகம்:
இத்திருக்கோயிலில் தினமும் அருள்மிகு குரு பகவானுக்கு கீழ்கண்ட விபரப்படி மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.
மூலவருக்கு அபிஷேக கட்டணம் ரூ. 800, உற்சவருக்கு அபிஷேக கட்டணம் ரூ. 300.
அருள்மிகு மூலவர் குரு அபிஷேகம் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரைஅருள்மிகு உற்சவர் குரு அபிஷேகம் தினமும் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை, பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை.
மூலவர் குருமூர்த்திக்கு அதிகாலையில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நேரங்களில் உற்சவர் குருமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்தில் கலந்துகொள்பவர்களுக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்களுக்கும் அருள்மிகு குருபகவான் உருவம் பதித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
திருவிழாக்கள்:
பஞ்ச பருவ உற்சவம்
மாதாந்திர குருவாரம் தோறும் விசேஷ தரிசனம்
குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் குருப்பெயர்ச்சி விழா.
மாசி மகா குருவார தரிசன விழா.
ஆயிரத்தெட்டு சங்காபிஷேக விழா
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா (10ம் நாளன்று குருபகவானின் தேர்த்திருவிழா)
இத்திருக்கோயிலில் உள்ள கட்டளை அர்ச்சனை கட்டண விபரம்:
1. மாதாந்திர கட்டளை (ஒரு வருடத்திற்கு) ரூ. 250 (வெளிநாட்டினருக்கு ரூ. 700)
2. பிரதி வியாழன் (ஒரு வருடத்திற்கு) ரூ. 1000 (வெளிநாட்டினருக்கு ரூ. 2500)
3. அபிஷேகம் (ஒன்றிற்கு) ரூ. 300
4. சகஸ்ரநாமம் (ஒன்றிற்கு) ரூ. 125
5. நிரந்தர கட்டளை ரூ. 5000 (வெளிநாட்டினருக்கு ரூ. 7500)
6. சங்கடஹர சதுர்த்தி (ஒரு வருடத்திற்கு) ரூ. 250, (வெளிநாட்டினருக்கு ரூ. 700)
7. நித்ய பூஜை கட்டளை ரூ. 5000
8. பிரதோஷம் (ஒரு வருடத்திற்கு) ரூ. 500
9. அன்னதான கட்டளை (ஒருநாள் மதிய உணவு 100 பேருக்கு) ரூ. 1500
அன்னதான கட்டளைக்காக ரூ. 20,000 முதலீடு செய்து அதன் வட்டியினை கொண்டு திருமண நாள், பிறந்தநாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவைகளில் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமான வரி விலக்கு (80}ஜி) உண்டு.
சுற்றியுள்ள கோயில்கள்:
கீழக் கோபுர வாயில் தென்புறம் சப்தமாதாவின் ஆலயமும், ஈசான்ய திசையில் பாதாள பைரவி காளியம்மன் ஆலயமும், தெற்கு கோபுர வாயில் கீழ்புறம் மேற்கு நோக்கி கல்யாண சாஸ்தா ஆலயமும், தேர்முட்டிக்கருகில் கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் கல்யாண வீரபத்ரரும் தஷன் விநாயகர் சன்னதியும் உள்ளன.
தங்கும் வசதி:
அருகில் உள்ள நகரமான கும்பகோணத்தில் தங்கும் வசதியுள்ளது. ஆலங்குடியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பகோணம்.
திருக்கோயில் நிர்வாகத்தை தொடர்புகொள்ள:
செயல் அலுவலர்,
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
(குரு பரிகாரஸ்தலம்)
ஆலங்குடி - 612 801
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி: 04374 - 269407
மின்னஞ்சல்: algguru@sancharnet.in
இணையதளம்: www.alangudigurubhagavan.org
ஆலங்குடி வருக! ஆலமர்செல்வன் அருள் பெறுக!!
No comments:
Post a Comment