Friday, July 24, 2009

எம பயம் போக்கும் திருவாஞ்சியம் - திருவாரூர் மாவட்ட திருத்தலங்கள்


திருவாஞ்சியம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீவாஞ்சியநாதர்
இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி
தல மரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - வன்னிகொன்றை மதமத்தம்.
2. அப்பர் - படையும் பூதமும் பாம்பும்.
3. சுந்தரர் - பொருவனார் புரிநூலர்.

தல வரலாறு

  • இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில் காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றிருந்த பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது. அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி தீர்த்தம் என்று வழங்குகிறது. பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது. உரோமச முனிவர் தவம் செய்து முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில் கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத் திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன் வழிபட்டுப் படைத்தல் தொழிலைப் பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின் மனைவி சாருமதி கயநோய் நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி எய்தினான்.

  • இயமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற / இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன் ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம் கூறுகின்றது.

சிறப்புக்கள்

  • இத்தல தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள் சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.

  • இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார். இஃது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும் கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.

  • இத்தலத்தில் 27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள் ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும், நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில் முறையே - குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம், வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இக்கோவில் மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9கீ.மீ.தூரத்தில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. (ஸ்ரீவாஞ்சியம் என்றும் வழங்கப்படுகின்றது).

பகுத்தறிவும் - திராவிட இயக்கங்களும்



“நாம் நாத்திகர்களுமல்ல, ஆத்திகர்களுமல்ல; பகுத்தறிவுவாதிகள்” என்று ஈழத்தடிகள் சொன்னது பகுத்தறிவு. ஆனால், “பெரியார் தமது பகுத்தறிவு இயக்கத்தை அதன் வளர்ச்சிப் போக்கில் நாத்திகமாக அறிவித்தார்.” - இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை பகுத்தறிவுள்ளோர் புரிந்துகொள்வர்.

  • "திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் கறாராக இருக்கிறது." ஆம், உண்மை; அதுதான் அதன் அடையாளம். ஆனால் இதுதான் பகுத்தறிவு என்று வாதம் செய்கின்றவரைப் போன்ற ‘மனுவாதி' வேறு யாரும் இருக்கமுடியாது. இங்கே மனுவாதி என்பது, மனு தர்மம் பற்றிய திராவிட இயக்கப் பார்வையை மேற்கொண்டு நாம் குறிப்பிடுவதாகும். உண்மையில் மனு, மனு தர்மம் குறித்து பல பரிமாணங்களில் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால், திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளாததன் காரணம் பார்ப்பனர்கள் ‘ஆரியர்கள்', பார்ப்பனர்கள் பேராசைக்காரர்கள், இரு நாக்குகள் கொண்டவர்கள், தந்திரசாலிகள், தாசர்களின் தலைவர்கள், வஞ்சக வேந்தர்கள், கொடுமைக் குணமுடையவர்கள், கோழைகள், படுமோசக்காரர்கள், சிண்டு முடிபவர்கள், சிரிக்கின்ற நரிகள், ஒட்டு வித்தைக்காரர்கள், அநீதிக்காரர்கள், (திராவிட) இனம் கெடுத்தவர்கள், ஈடில்லாக் கேடர்கள் (ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை') என்பதால்தான். இதில் முக்கியமானது என்னவெனில், அவர்கள் பிறப்பிலேயே அப்படிப்பட்டவர்கள் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'க் கருத்துதான். அதாவது திராவிடர்கள் ஓர் இனம் ஆரியர்கள் வேறு இனம் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'தான்.
  • மனு தர்மம், பார்ப்பானை உயர்ந்தவன், மேலானவன் என்று கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக் கீழானவன், இழிந்தவன், மோசடிக்காரன் என்று கற்பிக்கிறது. அதாவது பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்ற பணியை மனு செய்ததாகச் சொல்லிக்கொண்டு அதே பணியை திராவிட இயக்கமும் செய்கிறது; அதாவது மனுவுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு அதன் எதிர்மறையாக, அதாவது பார்ப்பான் மாறமாட்டான்; மாறமுடியாது, அவன் இருந்தால் அந்த இயக்கம் உருப்படாது என்ற மாறாநிலைக் கோட்பாட்டை வைத்திருக்கிறது திராவிட இயக்கம்.
  • கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் நாத்திகர்களும்கூட அதன் தமிழ் மொழிச் செழுமைக்காகப் புகழுகின்ற நேரத்தில், நல்ல குடிநீர்க் கிணற்றில், அதனுள் இறங்கி தூர் வாருபவர் அடியில் இருந்த சேற்றைக் கொண்டு வந்து, இதுதான் இந்தக் கிணறு, இதன் தண்ணீரைப் போய்க் குடிக்கிறீர்களே என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படிதான் கம்பரசம். அல்லது, அண்ணாதுரையின் சொற்பொழிவுகளில் இருந்து ஆபாசமான இரு வாக்கியங்களை எடுத்து மேற்கோள்காட்டி அண்ணாதுரையின் பேச்சே இவ்வளவுதான் என்று சொல்வதற்கு ஒப்பானதுதான், 12000 பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு 40 பாடல்களை எடுத்துக்காட்டி ஆபாசக் களஞ்சியம் என்று அதை வர்ணிப்பது.
  • வேதங்களுக்கும் கோயில் வழிபாட்டுக்கும் அதாவது உருவ வழிபாட்டுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்பது ஆய்வாளர்களின் முடிந்த முடிவு. ஆனால் அண்ணாதுரைக்கோ கோயில் என்பது வேதங்களுக்குரியவர்களின் கூடாரமாகத் தெரிகிறது. எனினும் அதே அண்ணாதுரை கேட்பதெல்லாம் “நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி!” (ஆரிய மாயை) வேதங்கள் இந்த உருவற்ற தேவனைத்தான் சொல்கின்றன என்பது திராவிட இயக்கத்தவர் அறியாதது. . . “தமிழ்க் கலை ஞானமாகிய சைவ சித்தாந்த சாஸ்திரிகளும், ஆகமங்களும் பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்” (ஆரிய மாயை) என்கிறார் அண்ணாதுரை. சைவ சித்தாந்தம் எப்படி சைவ வேளாளர்களுடையதோ அதுபோலவே திராவிட இயக்கமும் என்பதை வரலாற்றாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்பது திராவிட இயக்கம் அறியாத ஆய்வு. ‘கிருஷ்ண' என்றால் கருப்பு நிறம் என்று பொருள். ஆனால் கிருஷ்ணன் ஆரியக் கடவுளாம்; ராமன் கரு நிறத்தவன் என்பது வால்மீகியும் கம்பனும் சொல்லும் விவரம். அதே ராமன் சூரிய குலத்தவன்; மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களும் சூரிய குலம்தான், அப்படி இருக்க ராமன் ஆரியனாம். எனவே அண்ணாதுரைக்கு அவர்கள் வேண்டாமாம்.

    • சிவன் என்பதற்கு சிவப்பு நிறத்தவன் என்று பொருள்; ஆனால், பிராமணர்கள் நிராகரித்துவிட்ட சைவ சித்தாந்த சாஸ்திரிகள் வேண்டுமாம் அண்ணாதுரைக்கு. ஒருவேளை அண்ணாதுரையின் திராவிடர்கள் சிவந்த நிறத்தவர்களோ? ஆகமங்கள் அனைத்தும் ‘ஆரியர்களின்' மொழியான சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன என்பது அண்ணாதுரையும் அறியாத உண்மை; அதனால்தான் பிராமணர்கள் ஆகமங்களை வேண்டாம் என்று சொல்வதாக அண்ணாதுரையால் எழுத முடிகிறது. இவை அண்ணாதுரையின் ‘ஆராய்ச்சிக் கட்டுரை'யின் தரத்துக்கு மற்றோர் சான்று.




    இத்தகையவர்களின் பொட்டில் அடித்தாற்போன்று திராவிடக் கருத்தியலின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் சொல்லி இருப்பதைப் பாருங்கள்

    “. . . but the fact that the Pandyas, Cholas, and other Dravidian races were represented at the same time as having been originally, not rakshasas or monkeys, but Kshatriyas, equally with the Solar and Lunar princes of Aryan India, proves conclusively that they at least were considered almost as civilized and as occupying almost as respectable a position as the orthodox Aryans themselves.”

    ஆரியர்களின் குடுமியைக் கேலி செய்து மக்கள் பேசியதாகச் சொல்கின்ற அண்ணாதுரையின் ஆரிய மாயையை ‘ஆராய்ச்சிக் கட்டுரை' , திராவிடத்தின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் கொடுத்துள்ள கீழ்க்கண்ட குறிப்பைப் படித்ததில்லை போலும்.

    “The usage referred to is equally characteristic of the Dravidians. Up to the present day the custom of wearing the hair long, and twisted into a knot at the back of the head, is characteristic of all the more primitive castes in the southern provinces of the Tamil country, and of some of the castes that occupy a more respectable position in the society. In ancient times this mode of wearing the hair was in use amongst all Dravidian soldiers; and sculptured representations prove that a still earlier period it was the general Dravidian custom.”

    உண்மை இப்படி இருக்க ”வாழ்நிலையிலிருந்துதான் சிந்தனை உண்டாகிறதே ஒழிய சிந்தனையிலிருந்து வாழ்நிலை உண்டாவதில்லை” என்று சொல்லிக் கொண்டே, சிந்தனையிலிருந்து வாழ்நிலையை உருவாக்கிக் காட்டும் ரசவாதத்தைத் திராவிட இயக்கத்தவர்களாலேயே செய்யமுடியும்.
- சுந்தரேசன் வாசுதேவன்.
-நன்றி : வரலாறு.காம்

-நன்றி: காலச்சுவடு, ஏப்ரல் 2009

Thursday, July 23, 2009

திருவாரூர் மாவட்ட சிவஸ்தலங்கள் - திருமியச்சூர்



எல்லையில்லா கருணை வடிவானவள் என் அன்னை, எனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் ஓடி வந்து என் துன்பத்தை போக்குபவள், லலிதா நவரத்தின மாலையில் சொன்னதுபோல் "நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடதவள்" , நம்பியவருக்கோ நினைத்ததை நினைத்தவண்ணம் நடத்தி தருபவள். அகத்திய முனிவருக்கு நவரத்தினமாய் காட்சி தந்தவள்.
இவ்வளவு பெருமைகள் உடைய திருமீயச்சூர் திருத்தல வரலாற்றை காண்போம் :


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் உள்ளது.

இறைவன்: அருணேஸ்வரர் இறைவி: லலிதாம்பிகை, சாந்தநாயகி தீர்த்தம் : சூர்ய தீர்த்தம் தற்போதைய பெயர் : மீயச்சூர்

காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தியின் வாயிலிருந்து வசினி என்ற வாக்தேவதைகள் தோன்றி திருவாய் மலர்ந்தருளியதே லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.

அப்பர் தேவாரம் :

திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை



105

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே


தல வரலாறு

  • இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.

சிறப்புக்கள்

  • இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, மயிலாடுதுறை-பேரளம் இரயில்பாதையில், பேரளம் நிலையத்திற்கு மேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் பேரளத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.





இவர்கள் தகவல் தொழில்நுட்ப தமிழர்கள்

தகவல் தொழில் நுட்பம் நான் பணிசெய்யும் துறை, நாள் தோறும் இங்கே நான் சந்திக்கும் சில தமிழர்களின் (எல்லோரும் அல்ல) தாய்மொழிப்பற்று கண்டு அதிசயிக்கிறேன். இந்த ஐ.டி தமிழர்கள் பெருமைகொள்ளும் சிலவற்றை பட்டியலிடுகிறேன் :

[இந்த தமிழர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பட காட்சி]

படம்: தேவர் மகன்
சிவாஜி : "இந்த காட்டுமிராண்டி பய கூடத்தில ஒங்க அப்பனும் ஒருத்தன்தான்"
கமல் : "ஆனா அதை எண்ணி பெருமைப்பட முடியலை அய்யா"

என் சக தமிழர்கள் :

  • "எனக்கு தமிழ் சரியா பேசவராது, எழுத தெரியாது" என்று சொல்வதில் பெருமை கொள்பவர்கள். (இது பெருமையா..?)
  • தாய்மொழியின் பெயரைக்கூட "டாமில்" என்று ஆங்கில ஒளியில் உச்சரிப்பவர்கள் (இதில் ஒரு பெருமை)
  • அலுவலகத்தில் சக தமிழர்களுடன் தமிழில் பேசுவது அவமானம் என்று நினைப்பவர்கள்.
  • நல்ல தமிழில் பேசுபவர்களை ஏற இறங்க பார்ப்பார்கள், சிரிப்பார்கள்.
  • ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை பிழை எழுத்து பிழையை பொறுக்க மாட்டார்கள், தமிழில் எவ்வளவு தவறாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.
  • தன் தாய்மொழியில் ஒப்பமிடுவதை அவமானமாக கருதுபவர்கள்.
  • தமிழ்நாட்டுக்கு செல்லும் கடிதங்களில் கூட தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்.
  • நாட்களை சனி, ஞாயிறு என்று தமிழில் சொல்ல மாட்டார்கள், சாட்டேர்டே, சன்டே என்று தன் சொல்வார்கள்.
  • எண்களை ஒன்று, இரண்டு என்று சொல்வதற்கு தயங்கி ஒன், டூ என்று தான் சொல்வார்கள்.


இங்கே இவர்களின் தமிழ் உதாரணம் " மார்னிங் ஒரு பங்க்சென் அட்டென் பண்ணினேன், உங்களை அப்புறம் மீட் பண்றேன்", உங்க சன் நேம் என்ன..? " (பாவிகளா பகிரங்கமா மொழிக்கு துரோகம் செய்கிறோம் என்ற உணர்வே இல்லையா..?)

  • இந்த நிலை நீடித்தால் தமிழன் பேசும் மொழிக்கு பேர் "தமிழ்" என்று இருக்குமா ...?
  • ஆரியம் போல் வழக்கொழிந்து போகாதா..?
  • பெற்ற தாயை தாய் என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன அவமானம்..?
  • கூடவே பணியாற்றும் சக ஊழியர் தமிழர் என்று தெரிந்தும் தமிழில் பேசுவதில் உங்களுக்கு என்ன அவமானம்..?
  • வேலை நேரத்தில் அமெரிக்கனோடு ஆங்கிலத்தில் பேசுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ..அது பணியின் கட்டயாம்..தமிழனோடு ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேசுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்..?
  • கூடவே வேலை பார்க்கும் வட இந்தியன் சக வட இந்தியனோடு ஹிந்தியில் பேச வெட்கபடுவதில்லையே

  • உனக்கும் மட்டும் ஏன் இந்த முதுகெலும்பில்லாத வறட்டு ஆங்கில மோகம்..?

சிந்திப்பீர்....

-சுந்தரேசன் வாசுதேவன்.



குரு தரிசனம் - ஆலங்குடி - திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

வற்றாத நீரும் வளம் கொழிக்கும் காவிரியும் முற்றாத வாழை முகம் பார்க்கும் கொள்ளிடமும், வெண்ணாற்றிடை உயர்ந்த வீரத் தமிழ்க் கலையும் கண்ணாரக் காண்கின்ற கன்னித் தமிழகமாம் சோழ வளநாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம்.

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

இருப்பிடம்:

திருவாரூர் மாவட்டத்தில், வலங்கைமான் வட்டத்தில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ., தொலைவிலும், கும்பகோணம் மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

தல வரலாறு:

இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.

அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காப்பாற்றியதால் இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று.

அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்துகொண்ட சிறப்பை உடையது இத்திருத்தலம். அம்மையார் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது.

மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத் தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவபுண்ணியத்தால் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.

தல மூர்த்திகள்:

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்

தலச்சிறப்பு:

திருஇரும்பூளை மற்றும் ஆலங்குடி என்ற பெயர்களால் விளங்கப் பெறுவது. திருஞானச்சம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது.

பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை. இது இன்றளவும் நடைபெற்றுவரும் கண்கூடான உண்மையாகும்.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தலவிருட்சம்:

பூளைச் செடி

காலம்:

இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே இத்திருக்கோயிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை.

ஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டாகும். எனேவ அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாக கருத்தில் கொள்ளலாம்.

வழிபட்டோர்:

விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும்.

திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்து பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.

தீர்த்தங்கள்:

இத்திருத்தலத்தை சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோயிலை சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிழ்த புஷ்கரணி எனும் தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.

பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிழ்த பஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

வழிபாடும் வழிபடும் முறைகளும்:

இத்திருக்கோயிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியயை வணங்கி நேராக சென்று சுவாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசித்து பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை முதலியவைகளை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி முறையே வழிபட்டு, ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பின்னர் தீபம் ஏற்றும் இடத்தில் குருபரிகாரமாகிய இருபத்து நான்கு நெய் தீபம் ஏற்றி திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தினசரி மற்றும் சிறப்பு பூஜைகள்:

தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

1. காலசந்தி காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை.
2. உச்சிகாலம் மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை.
3. சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை
4. அர்த்தசாமம் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை..

அபிஷேகம்:

இத்திருக்கோயிலில் தினமும் அருள்மிகு குரு பகவானுக்கு கீழ்கண்ட விபரப்படி மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது.

மூலவருக்கு அபிஷேக கட்டணம் ரூ. 800, உற்சவருக்கு அபிஷேக கட்டணம் ரூ. 300.

அருள்மிகு மூலவர் குரு அபிஷேகம் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரைஅருள்மிகு உற்சவர் குரு அபிஷேகம் தினமும் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை, பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை.

மூலவர் குருமூர்த்திக்கு அதிகாலையில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நேரங்களில் உற்சவர் குருமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகத்தில் கலந்துகொள்பவர்களுக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்களுக்கும் அருள்மிகு குருபகவான் உருவம் பதித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

திருவிழாக்கள்:

பஞ்ச பருவ உற்சவம்
மாதாந்திர குருவாரம் தோறும் விசேஷ தரிசனம்
குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் குருப்பெயர்ச்சி விழா.
மாசி மகா குருவார தரிசன விழா.
ஆயிரத்தெட்டு சங்காபிஷேக விழா
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா (10ம் நாளன்று குருபகவானின் தேர்த்திருவிழா)

இத்திருக்கோயிலில் உள்ள கட்டளை அர்ச்சனை கட்டண விபரம்:

1. மாதாந்திர கட்டளை (ஒரு வருடத்திற்கு) ரூ. 250 (வெளிநாட்டினருக்கு ரூ. 700)
2. பிரதி வியாழன் (ஒரு வருடத்திற்கு) ரூ. 1000 (வெளிநாட்டினருக்கு ரூ. 2500)
3. அபிஷேகம் (ஒன்றிற்கு) ரூ. 300
4. சகஸ்ரநாமம் (ஒன்றிற்கு) ரூ. 125
5. நிரந்தர கட்டளை ரூ. 5000 (வெளிநாட்டினருக்கு ரூ. 7500)
6. சங்கடஹர சதுர்த்தி (ஒரு வருடத்திற்கு) ரூ. 250, (வெளிநாட்டினருக்கு ரூ. 700)
7. நித்ய பூஜை கட்டளை ரூ. 5000
8. பிரதோஷம் (ஒரு வருடத்திற்கு) ரூ. 500
9. அன்னதான கட்டளை (ஒருநாள் மதிய உணவு 100 பேருக்கு) ரூ. 1500

அன்னதான கட்டளைக்காக ரூ. 20,000 முதலீடு செய்து அதன் வட்டியினை கொண்டு திருமண நாள், பிறந்தநாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவைகளில் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமான வரி விலக்கு (80}ஜி) உண்டு.

சுற்றியுள்ள கோயில்கள்:

கீழக் கோபுர வாயில் தென்புறம் சப்தமாதாவின் ஆலயமும், ஈசான்ய திசையில் பாதாள பைரவி காளியம்மன் ஆலயமும், தெற்கு கோபுர வாயில் கீழ்புறம் மேற்கு நோக்கி கல்யாண சாஸ்தா ஆலயமும், தேர்முட்டிக்கருகில் கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் கல்யாண வீரபத்ரரும் தஷன் விநாயகர் சன்னதியும் உள்ளன.

தங்கும் வசதி:

அருகில் உள்ள நகரமான கும்பகோணத்தில் தங்கும் வசதியுள்ளது. ஆலங்குடியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பகோணம்.

திருக்கோயில் நிர்வாகத்தை தொடர்புகொள்ள:

செயல் அலுவலர்,
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
(குரு பரிகாரஸ்தலம்)
ஆலங்குடி - 612 801
திருவாரூர் மாவட்டம்

தொலைபேசி: 04374 - 269407

மின்னஞ்சல்: algguru@sancharnet.in
இணையதளம்: www.alangudigurubhagavan.org

ஆலங்குடி வருக! ஆலமர்செல்வன் அருள் பெறுக!!

Wednesday, July 22, 2009

தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள்

தமிழில் தெலுங்கு, அரபு, பாரசீகம், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் பல கலந்து தமிழ் சொற்களாகவே உலா வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகை சொற்களில் சில மட்டும் தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது.

தெலுங்கு - தமிழ்

ஆஸ்தி - செல்வம்
எக்கச்சக்கம் - மிகுதி
கெட்டியாக - உறுதியாக
சந்தடி - இரைச்சல்
சாகுபடி - பயிரிடுதல்
சொகுசு - நேர்த்தி
சொந்தம் - உரிமை
தாராளம் - மிகுதி
நிம்மதி - கவலையின்மை
பண்டிகை - பெருநாள்

அரபு - தமிழ்

அசல் - முதல்
கஜானா - கருவூலம்
இனாம் - நன்கொடை
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
ஜாஸ்தி - மிகுதி
நகல் - போலி
பதில் - மறுமொழி
பாக்கி - நிலுவை
மாமூல் - வழக்கம்

பாரசீகம் - தமிழ்

அலாதி - தனி
கம்மி - குறைவு
சர்க்கார் - அரசு,அரசாங்கம்
சந்தா - கட்டணம்.
தயார் - ஆயத்தம்
கிஸ்தி -வரி, நிலவரி
குமாஸ்தா - எழுத்தர்
புகார் - குறை
ரஸ்தா - சாலை
வாபஸ் - திரும்பப் பெறுதல்

பிரெஞ்சு - தமிழ்

பீரோ - அலுவலகம்
ஒப்பித்தால் - மருத்துவமனை
எகோல் - பள்ளிக்கூடம்
கம்ராத் - தோழன்
கிஸ்தியோன் - கேள்வி
திரக்தர் - இயக்குநர்
கப்பிதோன் - தளபதி
சொல்தா - இராணுவ வீரர்
கொலேழ் - கல்லூரி
முசியே - அய்யா

ஆங்கிலம் - தமிழ்

சினிமா - திரைப்படம்
பஸ் - பேருந்து
டிபன் - சிற்றுண்டி
டாக்டர் - மருத்துவர்
ஃபேன் - மின் விசிறி
ரேடியோ - வானொலி
வாட்ச் - கடிகாரம்
சோப் - வழலைக் கட்டி
லைட் - விளக்கு
டிக்கெட் - சீட்டு

வடமொழிச்சொல் - தமிழ்ச்சொல்

அகம்பாவம் - தற்பெருமை.
அக்கிரமம் - முறைகேடு
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகம் - மிகுதி
அனுக்கிரகம் - அருள்
அபிவிருத்தி - வளர்ச்சி
அவசரம் - விரைவு
ஆகாரம் - உணவு
ஆசை - விருப்பம்
ஆதாரம் - அடிப்படை
ஆரம்பம் - தொடக்கம்
இந்திரியங்கள் - ஐம்பொறிகள்
இரசிகன் - சுவைஞன்
இருதயம் - உள்ளம்
இலட்சியம் - குறிக்கோள்
உஷ்ணம் - வெப்பம்
உதாரணம் - எடுத்துக்காட்டு
உபயோகம் - பயன்
ஏகாந்தம் - தனிமை
கருணை - இரக்கம்
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
கும்பம் - குடம்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கீதம் - இசை
சமாதானம் - அமைதி
சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்
சீக்கிரம் - விரைவு
சீலம் - ஒழுக்கம்
சுகந்தம் - நறுமணம்
சொப்பனம் - கனவு
ஞாபகம் - நினைவு
தருமம் - அறம்
தூரம் - தொலைவு
தேசம் - நாடு
நவீனம் - புதுமை/புதினம்
நாமம் - பெயர்
நிபந்தனை - கட்டுப்பாடு
பயம் - அச்சம்
பரம்பரை - தலைமுறை
பிரசுரம் - வெளியீடு
பிரபஞ்சம் - உலகம்
பிரயாணம் - பயணம்
பேதம் - வேற்றுமை
மகிமை - பெருமை
முத்தி/முக்தி - வீடுபேறு
வயோதிகம் - முதுமை
வாலிபம் - இளமை
விவசாயம் - வேளாண்மை
வேதம் - மறை.

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்



நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறிய அளவில் கொஞ்சம் துவர்ப்பும், அதிகம் புளிப்பும் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி அளவில் சற்று பெரிதாக இருக்கும். இந்த நெல்லிக்குப் பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே இதை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள். தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரிய அளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். சிறியதை ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

  • தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

  • உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

  • ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும்.

  • நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.

  • அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

  • தரமான தலைச்சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டிலிருந்து, அதன் இலை, காய், பழம் உட்பட எல்லாமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மை, தலைசாயம், தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.

  • நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும்.

- இந்த நெல்லிக்கனி குறித்து இந்து மதப் புராணங்களில் ஒரு கதை ஒன்றும் கூறப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரமாம். அட அப்படியா?